தமிழகத்துக்கு 9 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
புதுடெல்லி , 25 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழகத்துக்கு காவிரியில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி நதிநீரை கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்ற
A


புதுடெல்லி , 25 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழகத்துக்கு காவிரியில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதிநீரை கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 4 மாநிலங்களும் சுமுகமாக பகிர்ந்து கொள்வதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் கடந்த 2018-ம் ஆண்டு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டன. இந்த இரு அமைப்புகளும் அவ்வப்போது கூடி, காவிரி நீர் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 54-வது கூட்டம் டெல்லியில் ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தமிழகத்துக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது குறித்து தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து, கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பு மற்றும் அங்கிருந்து தற்போது திறக்கப்பட்டு வரும் தண்ணீரின் அளவு குறித்து அந்த மாநில அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

இதையடுத்து, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்று, தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வீதம் காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவின்படி 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டால், தமிழகத்துக்கு சுமார் 11.66 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA