Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.)
முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் தெரிவித்த கருத்துகள், அவர் பதவியேற்கும்போது எடுத்துக்கொண்ட ரகசியக் காப்பு உறுதிமொழியை மீறியதாக அமையாதா? என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
அரசியலமைப்புச் சட்டத்தின்படி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்கும்போது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பது உள்ளிட்ட உறுதிமொழிகளுடன், அரசு நிர்வாகம் சார்ந்த முக்கிய ரகசியங்களை வெளியில் கசியவிடாமல் காப்பதாகவும் உறுதிமொழி ஏற்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பேசியதைச் சுட்டிக்காட்டிய கிருஷ்ணசாமி, நிதியமைச்சர் 3 துறைகளை ஆய்வு செய்ததாகவும், அந்தத் துறைகள் தொடர்பான கோப்புகள் அனைத்தும் தனது மேஜையில் இருப்பதாகவும், அவை ஆதாரங்களுடன் இருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
மேலும், அந்தக் கோப்புகள் தொடர்பாக “எதை எப்போ ஓபன் பண்ணணுமோ, அது அப்போ ஓபன் ஆகும்” என முதலமைச்சர் தெரிவித்திருப்பதாகவும் கிருஷ்ணசாமி குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய கோப்புகள் முதலமைச்சரிடம் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவற்றின் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் தாமதிப்பது ஏன்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “இத்தகைய கோப்புகளைப் பொதுவெளியில் பேசிவிட்டு நடவடிக்கை எடுக்காமல் தாமதிப்பதும், கோப்புகளைத் தமக்குள்ளேயே வைத்திருப்பதும் எதற்காக?” என கேள்வி எழுப்பியுள்ள கிருஷ்ணசாமி, இதன் பின்னணியில் திரைமறைவில் என்ன நடக்கிறது என்ற சந்தேகம் மக்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற விவகாரங்களை முன்கூட்டியே பொதுவெளியில் தெரிவிப்பதும், நடவடிக்கையை நிலுவையில் வைப்பதும் ஊழல் செய்தவர்கள் உஷாராகி சட்டத்தின் பிடியில் இருந்து தப்புவதற்கு வழிவகுக்காதா என்றும் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இது தவறான முன்னுதாரணம் மட்டுமின்றி, அதிகாரப்பூர்வ ரகசியக் காப்பு நடைமுறைகளுக்கு முரணானது அல்லவா? என்றும் அவர் தனது எக்ஸ் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ