Enter your Email Address to subscribe to our newsletters

மயிலாடுதுறை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.)
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பொறுப்பு தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் இந்திரகுமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தலைமை ஆசிரியர் இந்திரகுமார் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் கடந்த மாதம் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, ஆசிரியருக்கு எதிராக மாணவிகள் தவறான புகார் அளித்ததாகவும், விசாரணையில் மாணவிகள் தலைமை ஆசிரியருக்கு எதிராக சாட்சியம் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, விசாரணையில் சாட்சியமளித்த மாணவிகளை தலைமை ஆசிரியர் தொடர்ந்து மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், இன்று மிரட்டலுக்கு ஆளானதாக கூறப்படும் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளியிலேயே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து ஆசிரியர்கள் மாணவியை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலறிந்து அரசு மருத்துவமனைக்கு சென்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலசுப்ரமணியன், மாணவி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டார்.
மாணவியை மிரட்டியதாக கூறப்படும் தலைமை ஆசிரியர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவரை கைது செய்ய வேண்டும் என மாணவியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam