Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 25 ஆகஸ்ட் (ஹி.ச)
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அணையின் நீர்மட்டம் 88 அடியை கடந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 87.41 அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 88.21 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொத்த நீர் இருப்பு 50.63 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. அணையின் முழு கொள்ளளவு 120 அடி என்பது குறிப்பிடத்தக்கது.
அணைக்கான நீர்வரத்தை பொறுத்தவரை நேற்று வினாடிக்கு 13,415 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று சற்று குறைந்து வினாடிக்கு 12,534 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து குறைந்தாலும் கூட, தொடர்ந்து வரும் நீரின் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இதனிடையே மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 2,000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. டெல்டா பாசனத்திற்காக இன்னும் தண்ணீர் திறக்கப்படவில்லை.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவது டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b