மேட்டூர் அணையில் போலீசார் ஆய்வு – காவிரி டெல்டா பாசனத்திற்கு விரைவில் தண்ணீர் திறக்க வாய்ப்பு
சேலம், 25 ஆகஸ்ட் (ஹி.ச.) மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை நெருங்கி வரும் நிலையில், காவிரி டெல்டா பாசனத்திற்கு விரைவில் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விரைவில் தண்ணீர் திறக
மேட்டூர் அணை


சேலம், 25 ஆகஸ்ட் (ஹி.ச.)

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை நெருங்கி வரும் நிலையில், காவிரி டெல்டா பாசனத்திற்கு விரைவில் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் தலைமையில் போலீசார் இன்று மேட்டூர் அணையின் வலது கரைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். தண்ணீர் திறக்கப்படும் பட்சத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின்போது நீர்வளத்துறை அதிகாரிகளும் உடனிருந்தனர்.

மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். இதன்மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சுமார் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

ஆனால் நடப்பாண்டில் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தற்போது அணையின் நீர்மட்டம் 88.21 அடியாக உள்ள நிலையில், விரைவில் 90 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Hindusthan Samachar / GOKILA arumugam