Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.)
பூந்தமல்லியில் அரசு உதவிபெறும் பள்ளியில் வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி கிடந்ததாகவும், அந்த உணவைச் சாப்பிட்ட 17 மாணவர்கள் வாந்தி மற்றும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வெளியான தகவலுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசின் மெத்தனப் போக்கு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
பள்ளிகளில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆய்வு என்ற பெயரில் நடத்தும் நிகழ்வுகள் வெறும் போட்டோஷூட்டாக இருப்பதாக விமர்சித்துள்ள நயினார் நாகேந்திரன், உணவு தயாரிக்கப்படும் இடங்களில் முறையான சுகாதார ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்த்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வழங்கப்படும் உணவின் தரத்தை முறையாகக் கண்காணித்து ஆய்வு செய்வதற்காக தனிக்குழு அமைக்க வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ