Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 25 ஆகஸ்ட் (ஹி.ச.)
நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி சென்ற ஈச்சர் டெம்போ லாரி, பரமத்தி தாலுகா அலுவலகம் அருகே பைபாஸ் சாலையில் சென்றபோது, முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதும் வகையில் அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த இருசக்கர வாகன ஓட்டி, ஸ்கூட்டரை நிறுத்த முயன்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த டெம்போ லாரி, ஸ்கூட்டர் மீது மோதியதுடன், சாலையோரத்தில் இருந்த டிராக்டர் ஷோரூமுக்குள் அதிவேகமாக புகுந்தது.
லாரி மோதியதில் ஷோரூமின் சுவர் இடிந்து விழுந்ததுடன், கண்ணாடிகள், மேற்கூரை உள்ளிட்டவை பலத்த சேதமடைந்தன.
அதிர்ஷ்டவசமாக, விபத்து நடந்த நேரத்தில் ஷோரூமுக்குள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்திவேலூர் போலீசார், டெம்போ லாரி ஓட்டுநரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், ஓட்டுநர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, லாரி ஷோரூமுக்குள் புகுந்து சுவரை இடித்துக்கொண்டு வெளியே வரும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
இந்த காட்சிகளே தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Hindusthan Samachar / VINOTH KUMAR P