ஓணம் பண்டிகை எதிரொலி - தோவாளை மலர் சந்தையில் விடிய விடிய விற்பனை
கன்னியாகுமரி, 25 ஆகஸ்ட் (ஹி.ச.) ஓணம் பண்டிகையையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் சிறப்பு பூ விற்பனை களைகட்டியுள்ளது. கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் குவிந்ததால், சந்தை திருவிழா போல் காட்சியளித்தது. தமிழ்நா
Flowers


கன்னியாகுமரி, 25 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஓணம் பண்டிகையையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் சிறப்பு பூ விற்பனை களைகட்டியுள்ளது. கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் குவிந்ததால், சந்தை திருவிழா போல் காட்சியளித்தது.

தமிழ்நாட்டின் முக்கிய மலர் சந்தைகளில் ஒன்றான தோவாளை மலர் சந்தைக்கு மதுரை, திண்டுக்கல், ஓசூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும், குமாரபுரம், ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர், தோவாளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் தினமும் பூக்கள் கொண்டு வரப்படுகின்றன. இங்கிருந்து கேரளாவுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், வீடுகளில் அத்தப்பூ கோலமிடுவதற்காக பல்வேறு வகையான பூக்களை வாங்க கேரள வியாபாரிகள் தோவாளை சந்தையில் குவிந்துள்ளனர். இதையொட்டி சிறப்பு பூ விற்பனை இரவு முழுவதும் விடிய விடிய நடைபெற்றது.

ஓணம் சிறப்பு விற்பனைக்காக சுமார் 5,000 டன்னுக்கும் அதிகமான பூக்கள் சந்தைக்கு கொண்டு வரப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கேரளாவில் இருந்து பெரிய வாகனங்களில் வந்த வியாபாரிகள் பூக்களை போட்டி போட்டு வாங்கிச் சென்றதால் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

தேவை அதிகரித்துள்ளதால் பல்வேறு வகையான பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.

ஒரு கிலோ சிவப்பு கேந்தி மற்றும் மஞ்சள் கேந்தி தலா ரூ.100-க்கும், ரோஸ் ரூ.250-க்கும், செவ்வந்தி ரூ.170-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பூக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிக வரவேற்பால் தோவாளை மலர் சந்தை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P