Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 25 ஆகஸ்ட் (ஹி.ச)
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டதாகக் குற்றம்சாட்டி, முன்னாள் சபாநாயகர் அப்பாவு கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தை சீர்குலைத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் சேது சமுத்திரத் திட்டம், மதுரவாயல் மேம்பாலப் பணிகள், புதிய தலைமைச் செயலகம், சென்னை அருகே செயற்கைக்கோள் நகரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டதாக அப்பாவு குறிப்பிட்டுள்ளார்.
2006-ல் கலைஞர் மீண்டும் முதல்வரான பின்னர் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் மற்றும் டைடல் பூங்காக்கள் உருவாக்கப்பட்டு, லட்சக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான அடித்தளத்தையும் கலைஞர் அமைத்ததாகக் கூறியுள்ள அப்பாவு, 2021-ல் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அந்தத் திட்டத்தை முன்னெடுத்ததாக தெரிவித்துள்ளார். நிலம் கையகப்படுத்துதல், சென்னை முதல் பரந்தூர் வரையிலான மெட்ரோ விரிவாக்கம், பரந்தூர் முதல் பெங்களூரு வரையிலான 8 வழி பசுமைச் சாலை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதாகக் கூறி, “வெண்ணெய் திரண்டு வந்தபோது பால் பானையை உடைத்தது போல்” திட்டத்தை சீர்குலைத்துவிட்டதாக முதல்வரை அப்பாவு விமர்சித்துள்ளார்.
மேலும், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கத்தில் தமிழக அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ள அவர், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை சின்னாபின்னமாக்கி தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிட்டதாகவும், தமிழக இளைஞர்களுக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ