Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.)
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை விமர்சித்து வரும் எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் கட்சிகளை தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக தவெக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “பல்லாயிரம் கோடி பறந்துபோனதா?” என கேள்வி எழுப்பியுள்ளது.
பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து, “தமிழ்நாடு அவ்வளவுதான்” என அவதூறு பிரச்சாரம் செய்பவர்களின் கதறலுக்கு காரணம் இருப்பதாகவும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பரந்தூர் பகுதியில் தொழில் செய்வதற்காக சில லட்சங்கள் மதிப்புள்ள இடங்களை பல கோடிகளாக விலை ஏற்றி, பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழித்து நிலங்களை வாங்கிப் போட்டதாகவும், விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்ற அறிவிப்பு அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தவெக ஐடி விங் குற்றம்சாட்டியுள்ளது.
“இடத்தை வைத்து மடத்தைப் பிடிக்க நினைத்த கதை பொய்த்துப்போனதே” என்ற ஆதங்கத்தில் பல்வேறு தரப்பினரும் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதை எதிர்த்து ஒப்பாரி வைத்து வருவதாகவும் விமர்சித்துள்ளது.
மேலும், அரசியல் களத்தில் இல்லாதவர்களும் “போச்சே!” என குமுறுவதாகவும், திமுகவும் இந்த விவகாரத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் பதற்றத்தில் இருப்பதாகவும் அந்தப் பதிவில் கடுமையாக சாடப்பட்டுள்ளது.
இறுதியாக, “இவர்களின் பதற்றத்தைப் பார்த்தால்… பரந்தூர் அடுத்த 2ஜியா?” என கேள்வி எழுப்பி, தவெக ஐடி விங் தனது எக்ஸ் பதிவை நிறைவு செய்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ