Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 25 ஆகஸ்ட் (H.S.)
சேலத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசு அறிவித்துள்ள மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது தங்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழக முதலமைச்சர் விஜய் நேற்று 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், மாவட்டத்திற்குள் இயக்கப்படும் அனைத்து அரசு பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணத் திட்டத்தை விரிவுபடுத்துவதாக அறிவித்திருந்தார்.
இந்தத் திட்டம் அக்டோபர் 2ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நகரப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், இதன் காரணமாக தனியார் பேருந்துகளில் பெண் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், மாவட்டங்களுக்குள் இயக்கப்படும் அரசு மப்சல் மற்றும் எக்ஸ்பிரஸ் பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம் அறிவிக்கப்பட்டுள்ளதால், தனியார் பேருந்துகளின் வருவாய் மேலும் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தை விரிவுபடுத்தும் முடிவை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் அல்லது தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, இன்று பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam