டெல்லியில் கனமழையால் எய்ம்ஸ் பகுதியில் கடும் நீர்த்தேக்கம் - போக்குவரத்து பாதிப்பு
புதுடெல்லி, 25 ஆகஸ்ட் (ஹி.ச.) டெல்லியில் இன்று காலை பெய்த கனமழையால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக எய்ம்ஸ் மேம்பால சுழல் பகுதியில் கடும் நீர்த்தேக்கம் ஏற்பட்டதால் நகரம் முழுவதும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. எய்ம்ஸ், பிகா
டெல்லியில் கனமழையால் எய்ம்ஸ் பகுதியில் கடும் நீர்த்தேக்கம் - போக்குவரத்து பாதிப்பு


புதுடெல்லி, 25 ஆகஸ்ட் (ஹி.ச.)

டெல்லியில் இன்று காலை பெய்த கனமழையால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக எய்ம்ஸ் மேம்பால சுழல் பகுதியில் கடும் நீர்த்தேக்கம் ஏற்பட்டதால் நகரம் முழுவதும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

எய்ம்ஸ், பிகாஜி காமா பிளேஸ், பாபா காரக் சிங் மார்க், ஆர்.கே.புரம் செக்டார் 1 மற்றும் சாந்தி பாத் உள்ளிட்ட பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது. நேற்று பெய்த கனமழையைத் தொடர்ந்து இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

இன்று டெல்லியில் பல இடங்களில் மிதமான மழையும், ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் பலத்த காற்று வீசவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்தர்ஜங்கில் இன்று காலை 5.30 மணிக்கு வெப்பநிலை 26.6 டிகிரி செல்சியஸாக பதிவானதுடன், ஈரப்பதம் 100 சதவீதமாக இருந்தது. அங்கு காலை 8.30 மணி வரை 3 மில்லி மீட்டர் மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடி மின்னலுடன் கூடிய மழையோடு பலத்த காற்றும் வீசிய மோசமான வானிலை காரணத்தால் டெல்லியில் விமான சேவை பாதிக்கப்பட்டது. விமான போக்குவரத்து குறித்த தகவலை அளிக்கும் ஃபிளைட் ரேடார் தளம் அளித்துள்ள தகவலின் படி டெல்லி விமான நிலையத்தில் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், 160 விமானங்கள் தாமதத்தை எதிர்கொண்டுள்ளதாக என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள அண்மைய தகவலின்படி டெல்லியில் மிதமான மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரின் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குருகிராம் மற்றும் ஃபரிதாபாத் பகுதிக்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

குருகிராமில் நேற்று பெய்த மழையால் சுபாஷ் சௌக் உள்ளிட்ட பகுதிகளில் நீர்த்தேக்கம் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து குருகிராம் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம், கார்ப்பரேட் அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை இன்று வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், சாலைகள் மற்றும் வடிகால்களை சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி அமைப்புகள் மேற்கொள்ள ஏதுவாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

குடியிருப்பாளர்கள் இந்த அறிவுறுத்தலுக்கு ஒத்துழைக்குமாறும், தங்கள் பயணங்களை திட்டமிட்டுக்கொள்ளுமாறும் குருகிராம் துணை ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b