Enter your Email Address to subscribe to our newsletters

பொள்ளாச்சி, 25 ஆகஸ்ட் (ஹி.ச.)
கோவை மாவட்டம் வால்பாறை மலையடிவார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆழியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதோடு, ஆழியார் அருகே உள்ள குரங்கு அருவி மற்றும் கவி அருவிக்கும் நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது.
கோவையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் கவி அருவிக்கு , பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். தற்போது கவி அருவியில் வழக்கத்தை விட அதிக அளவில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் யாரும் அருவியில் குளிக்கவோ, அருவியின் அருகே செல்லவோ கூடாது என வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், சுற்றுலா பயணிகள் தடையை மீறி அருவிக்கு செல்வதை தடுக்க வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மழையின் தீவிரம் குறைந்து நீர்வரத்து சீரான பிறகே மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b