Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஆகஸ்ட் (ஹி.ச)
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில், கரும்பு ஏற்றிச் சென்ற லாரியை 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டமாக வழிமறித்து கரும்புகளை பறித்து சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக செல்லும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி உலா வருகின்றன. குறிப்பாக, வனப்பகுதி வழியாகச் செல்லும் சரக்கு வாகனங்களில் காய்கறிகள் அல்லது கரும்பு போன்ற உணவுப் பொருட்கள் உள்ளதா என்பதை நுகர்ந்து பார்த்து, சில நேரங்களில் வாகனங்களை வழிமறிப்பதும் தொடர்கிறது.
இந்த நிலையில், தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி ஒன்று சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆசனூர் அருகே வனப்பகுதி சாலையில் லாரி சென்று கொண்டிருந்தபோது, திடீரென வனப்பகுதியில் இருந்து 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கொண்ட கூட்டம் சாலைக்கு வந்தது.
கரும்பு லாரியை கண்டதும் யானைகள் கூட்டமாக லாரியை நோக்கி வந்து வழிமறித்தன. பின்னர் லாரியில் இருந்த கரும்புத் துண்டுகளை தும்பிக்கையால் பறித்து சாப்பிடத் தொடங்கின. இதனால் லாரி ஓட்டுநர் அதிர்ச்சியடைந்தார்.
யானைகள் லாரியைச் சுற்றி நின்ற நிலையில், ஓட்டுநர் தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளார். இதையடுத்து யானைகள் கூட்டம் மெல்ல வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பின்னர் ஓட்டுநர் லாரியை மெதுவாக இயக்கி, அங்கிருந்து பாதுகாப்பாக கடந்து சென்றார்.
யானைகள் சாலையில் திரண்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. கரும்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளை காட்டு யானைகள் தொடர்ந்து வழிமறித்து வருவதால், சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வனப்பகுதி சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ