கர்நாடகா அரசிடம் தமிழ்நாடு அரசு விளக்கம் கேட்குமா?- உதயநிதி ஸ்டாலின் கேள்வி
சென்னை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்நாடு சட்டப் பேரவையில் 7-வது நாளக இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. முன்னதாக சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், கர்நாடக வனத் துறையினால் சுட்டுக் கொல்லப்பட்ட 3 தமிழர்களும் சித்
Udhayanidhi Stalin


சென்னை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டப் பேரவையில் 7-வது நாளக இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

முன்னதாக சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், கர்நாடக வனத் துறையினால் சுட்டுக் கொல்லப்பட்ட 3 தமிழர்களும் சித்தரவதை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, அவர்களின் கொலை தொடர்பாக கர்நாடக அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டதா? என கேள்வி எழுப்பினார்.

இது குறித்து பேசிய அவர்,

கர்நாடக வனத் துறையினரால் அந்தோணிசாமி, குமார், ஜான் ரோஸ் பீட்டர் ஆகிய 3 தமிழர்கள் கடந்த 15-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே இந்த அவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், இன்று 3 தமிழர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

அதில் 3 பேரும் சித்தரவதை செய்யப்பட்டு, மிக அருகாமையில் நிற்க வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர் என தெரியவந்துள்ளது. 3 பேரில் உடலிலும் படுகாயம் இருந்ததாகவும், விலா எலும்பு முறிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிய வருகிறது. இது முழுக்க முழுக்க படுகொலை. இதன் மீது இந்த அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது?

குறைந்தபட்சம் அந்த மாநில அரசிடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளதா? கடந்த வாரம் தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் கர்நாடக முதல்வரிடம் தமிழக அரசு நேரடியாக கண்டனம் தெரிவித்துள்ளதா? கர்நாடக மாநில காவல் துறைக்கு பதிலாக ஒரு மேலிட விசாரணை நடத்த வேண்டும் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என கூறியிருந்தோம்.

அது தொடர்பாக கர்நாடக முதல்வரிடம் பேசப்பட்டதா? இந்த விவாகரம் நடந்த உடனடியாக முதல்வரோ அல்லது அமைச்சரோ அந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லியிருக்க வேண்டும்.

3 தமிழர்கள் குடும்பத்திற்கு தேவையான நிதி உதவியும், சட்ட உதவியும் அரசு செய்ய வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

அதற்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், வனத்துறை, சட்டத்துறை அமைச்சர்கள் இந்த விவகாரத்தில் ஏற்கனவே பதில் சொல்லிவிட்டனர்.

நீங்கள் கேட்ட பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த கேள்விகளுக்கு பதில் கிடைத்தவுடன் அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN