Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 25 ஆகஸ்ட் (ஹி.ச.)
தெலங்கானா சட்டசபை கூட்டத்தொடர் வருகிற செப்டம்பர் 7-ந் தேதி தொடங்குகிறது.
இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, சட்டமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.
கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதும், விவாதிக்கப்பட உள்ள முக்கிய அம்சங்கள் குறித்தும் இன்னும் இறுதி முடிவு செய்யப்படவில்லை.
இந்த கூட்டத்தொடரில் முக்கிய தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற தெலங்கானா அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயதை தற்போதுள்ள 25 ஆண்டுகளில் இருந்து 21 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்படலாம் என தெரிகிறது.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு, அதை மத்திய அரசுக்கு அனுப்பி, தேர்தலில் போட்டியிடும் வயது வரம்பை குறைப்பதற்கான சட்டத்திருத்தத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இளைஞர்களுக்கு சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் அதிக பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதே இந்த மாற்றத்தின் நோக்கம் என்று முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி ஏற்கனவே கூறியிருந்தார்.
இதற்கிடையே, சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்தும் முதல்-மந்திரி ஆலோசனை நடத்தினார்.
குறிப்பாக, நிலுவையில் உள்ள நீர்ப்பாசன திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் திட்டப்பணிகள் பாதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் வனத்துறை அனுமதிகளுக்குத் தேவையான நிதியை அரசு வழங்கும் என்று உறுதி அளித்த முதல்-மந்திரி, ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்கள் தொகுதியின் வளர்ச்சிப் பணிகளில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்-மந்திரி பட்டி விக்ரமார்க்கா, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தேர்தலில் போட்டியிடும் குறைந்தபட்ச வயதை 21 ஆக குறைப்பது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், அது உடனடியாக நடைமுறைக்கு வராது.
இதற்கு மத்திய அரசு மற்றும் நாடாளுமன்றத்தின் மூலம் தேவையான சட்டத்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA