கூடலூரில் 5வது நாளாக தொடரும் புலி வேட்டை
கூடலூர், 25 ஆகஸ்ட் (ஹி.ச) நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி லாரெஸ்டன் பகுதியில் பொதுமக்கள் இருவரை தாக்கிக் கொன்ற புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் இன்று ஐந்தாவது நாளாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் ச
கூடலூரில் 5வது நாளாக தொடரும் புலி வேட்டை


கூடலூர், 25 ஆகஸ்ட் (ஹி.ச)

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி லாரெஸ்டன் பகுதியில் பொதுமக்கள் இருவரை தாக்கிக் கொன்ற புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் இன்று ஐந்தாவது நாளாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக அப்பகுதியில் சுற்றித்திரியும் புலி, இரண்டு பேரை தாக்கி உயிரிழக்கச் செய்ததை அடுத்து, அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். இதனையடுத்து அந்த புலியை விரைந்து பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு உத்தரவிடப்பட்டது.

இதன்படி புலியை பிடிப்பதற்காக 90 பேர் கொண்ட சிறப்பு வனக்குழு களமிறக்கப்பட்டுள்ளது. வனக்காப்பாளர்கள், வனவர், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் புலி கண்காணிப்பு குழுவினர் இணைந்து தொடர்ந்து ஐந்தாவது நாளாக காடு முழுவதும் சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.

புலியை உயிருடன் பிடிக்க வனத்துறையினர் இரண்டு வகையான திட்டங்களை வகுத்துள்ளனர். புலி நடமாடும் பகுதிகளாக கண்டறியப்பட்ட 11 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் புலியின் நடமாட்டத்தை துல்லியமாக கண்காணிக்க 80 இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கேமராவில் பதிவாகும் காட்சிகளை வைத்து புலியின் இருப்பிடத்தை உறுதி செய்து, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் வனத்துறை தயாராக உள்ளது.

இதற்கிடையே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். பொதுமக்கள் யாரும் தனியாக வெளியே செல்ல வேண்டாம் எனவும், குறிப்பாக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் தேயிலை தோட்டங்களுக்கும், வனப்பகுதிகளுக்கும் தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

புலி பிடிபடும் வரை வனத்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b