திருவாரூரில் கனமழையால் 2,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் – இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
திருவாரூர், 25 ஆகஸ்ட் (ஹி.ச.) திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் பெய்த கனமழையால், அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 2,000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. பேரளம், கலக்குடி, மேணாங்குடி, பாலூர், ர
நெற்பயிர்கள் சேதம்


திருவாரூர், 25 ஆகஸ்ட் (ஹி.ச.)

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் பெய்த கனமழையால், அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 2,000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

பேரளம், கலக்குடி, மேணாங்குடி, பாலூர், ரெட்டக்குடி, செம்பியநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறுவடைக்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில், கனமழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் சாய்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

மும்முனை மின்சாரம் பற்றாக்குறை, கடும் கோடை வெயில், வறட்சி உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள், ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர். தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் பயிர்கள் சேதமடைந்ததால், முதலீடு செய்த தொகையை கூட எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட விளைநிலங்களை வேளாண்மை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடியாக நேரில் பார்வையிட்டு, உரிய முறையில் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam