சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை - 5 இடங்களில் வேரோடு சாய்ந்த மரங்களை அகற்றும் பணிகள் தீவிரம்
சென்னை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னையில் நேற்று இரவு முதல் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மந்தைவெளி, ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சுமார் ஐந்து இடங்களில் பெரிய
சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை -  5 இடங்களில் வேரோடு சாய்ந்த மரங்களை அகற்றும் பணிகள் தீவிரம்


சென்னை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னையில் நேற்று இரவு முதல் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மந்தைவெளி, ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சுமார் ஐந்து இடங்களில் பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

தொடர்ந்து பெய்த மழையால் மண் இளகியதே மரங்கள் சாய்ந்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

இதேபோல் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை காரணமாக எழும்பூர் பகுதியில் ஒரு கட்டிடத்தின் மாடியில் அமைக்கப்பட்டிருந்த கேபிள் டவர் திடீரென சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள், விழுந்து கிடந்த மரங்களையும், சரிந்த கேபிள் டவரையும் அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தொடர் மழை காரணமாக சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Hindusthan Samachar / vidya.b