கன்னியாகுமரியை கனிம வளங்களுக்காக அழிப்பதா? – தமிழக அரசுக்கு வேல்முருகன் கண்டனம்
சென்னை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.) கன்னியாகுமரி மாவட்டத்தில் அரியவகை கனிமங்களை அகழ்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் IREL நிறுவனத்திற்கு எதிராக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். கனிம வளங்களைப் பிரித்தெடுப்பதற்காக
Velmurugan


Kn


சென்னை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.)

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரியவகை கனிமங்களை அகழ்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் IREL நிறுவனத்திற்கு எதிராக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கனிம வளங்களைப் பிரித்தெடுப்பதற்காக கன்னியாகுமரியின் இயற்கைச் சூழலையும், மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக வேல்முருகன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

கனிம வளங்களுக்காக, கன்னியாகுமரியை அழிப்பது சரியா? தமிழ்நாடு அரசு துணை போகிறதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் மிடாலம், கீழ்மிடாலம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் 1,144 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் அரியவகை கனிமங்களை அகழ்ந்தெடுக்க IREL மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கடும் கண்டனம் தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.

கடற்கரை மணலில் இருந்து மோனசைட், இல்மனைட், ஜிர்கான், ரூடைல், கார்னெட், சிலிமனைட் உள்ளிட்ட அரியவகை கனிமங்களை பெருமளவில் பிரித்தெடுப்பது, இயற்கையான மணல் அமைப்பு, கடற்கரைப் பாதுகாப்பு, நிலத்தடி நீர், விவசாயம் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே மணவாளக்குறிச்சி பகுதியில் கனிம மணல் அகழ்வுடன் தொடர்புடைய கடலோர மாற்றங்கள் குறித்து ஆய்வுகள் உள்ள நிலையில், புதிய பகுதிகளுக்கு நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது கண்டனத்திற்குரியது என்றும் வேல்முருகன் குறிப்பிட்டுள்ளார்.

IREL நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள கனிமச் சுரங்க நில ஒதுக்கீட்டு கால நீட்டிப்பு அரசாணையை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், சட்டப்பேரவையில் தனது எதிர்ப்பை பதிவு செய்து, பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர்களை நேரில் சந்தித்து திட்டத்திற்கான அனுமதியை மறுக்க வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், கடற்கரை, நிலத்தடி நீர், விவசாயம், மீன்வளம் மற்றும் கதிரியக்கப் பாதுகாப்பு தொடர்பாக சுயாதீன நிபுணர் குழுவை அமைத்து முழுமையான ஆய்வு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஒன்றிய அரசு தமிழகத்தின் கோரிக்கையைப் புறக்கணித்தால், சட்டரீதியான நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் திட்டத்தை எதிர்க்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியின் இயற்கை வளத்தைப் பாதுகாப்பது தமிழக அரசின் கடமை எனக் குறிப்பிட்டுள்ள அவர், மிடாலம், கீழ்மிடாலம் உள்ளிட்ட பகுதிகளில் IREL முன்னெடுத்து வரும் கனிமச் சுரங்கத் திட்டத்திற்கு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என்றும், திட்டத்தைத் தடுத்து நிறுத்த ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு உறுதியான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ