Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.)
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் விதவைப் பெண்களுக்கான உதவித்தொகை தொடர்பான குறுஞ்செய்தி பரவியதால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
60 வயதுக்குட்பட்ட கணவனை இழந்த பெண்கள் ரூ.1,500 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்றும், திருவரங்குளம் ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஒன்றிய அலுவலகத்திற்கு வருகை தர வேண்டும் என்றும் குறுஞ்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தகவலை நம்பி, திருவரங்குளம் ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, பிற பகுதிகளைச் சேர்ந்த பெண்களும் அதிக அளவில் மனுக்களுடன் ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர். ஒரே நேரத்தில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டதால், அலுவலக வளாகத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து, ஒன்றிய அலுவலக பணியாளர்கள் பெண்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். திருவரங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து வந்தவர்களின் மனுக்கள் மட்டும் பெறப்பட்டன.
மேலும், விதவைப் பெண்களுக்கான உதவித்தொகை விண்ணப்பப் பதிவு அந்தந்த ஒன்றியங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P