Enter your Email Address to subscribe to our newsletters

தருமபுரி, 25 ஆகஸ்ட் (ஹி.ச.)
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கலில் பரிசல் இயக்குவதற்கு விதிக்கப்பட்ட தடை இன்று 10-வது நாளாக தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்ராம்பாளையம், பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக உயர்ந்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக உள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் போக்கு காணப்படுவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் பிரதான அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உத்தரவு தொடர்ந்து 10-வது நாளாக அமலில் இருந்து வருகிறது. பரிசல்கள் அனைத்தும் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நீர்வரத்து சீரான நிலைக்கு வரும் வரை இந்த தடை தொடரும் என்றும், பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பரிசல் தடையால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ள அதே வேளையில், பரிசல் ஓட்டிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b