Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 26 ஆகஸ்ட் (ஹி.ச.)
பிரயாக்ராஜில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பில் சேர விரும்பிய முஸ்லிம் மாணவி, பள்ளி சீருடையுடன் ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் என்று கோரி அலகாபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பள்ளியின் சீருடை விதிமுறைகளை மாணவர்கள் தங்களது தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் மாற்றிக்கொள்ள உரிமை இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
மேலும், ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மதத்தின் கட்டாய நடைமுறை அல்ல என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இதற்கு அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எங்கள் மதத்தில் எது முக்கியமானது என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம். அதை நீதிபதிகள் முடிவு செய்ய வேண்டியதில்லை. இது எங்கள் மதத்தின் மீதான தாக்குதல்” என்றார்.
மேலும், சீருடையில் அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பது மட்டுமே சமத்துவம் ஆகாது. அந்த மாணவி தலையில்தான் ஹிஜாப் அணிந்துள்ளார்,மனதில் அணியவில்லை.
ஹிஜாப் தொடர்பான இந்த விவகாரம் அரசியல் சாசனத்தின் 19 மற்றும் 25-வது பிரிவுகளுக்கு எதிரானது என்றும் ஓவைசி தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA