ஆந்திராவில் கடும் வறட்சி,அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - ஒய்.எஸ்.ஆர் ஜெகன் மோகன் ரெட்டி குற்றச்சாட்டு
அமராவதி , 26 ஆகஸ்ட் (ஹி.ச.) ஆந்திர மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில், விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் குற்றம்சாட்
A


அமராவதி , 26 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஆந்திர மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில், விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் குற்றம்சாட்டினார்.

தாடேப்பள்ளியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் :

மாநிலம் முழுவதும் மழைப்பொழிவு குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

28 மாவட்டங்களில் மழைப்பொழிவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், ஜூன் மாதம் முதல் இதுவரை 52 சதவீதம் மட்டுமே மழை பெய்துள்ளதாகவும் கூறினார்.

மாநிலத்தில் உள்ள 688 மண்டலங்களில் 625 மண்டலங்கள் கடுமையான மழைப்பற்றாக்குறையை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மழை குறைவாக இருக்கும் என்பது தெரிந்திருந்தும், பயிர்களுக்கு தேவையான தண்ணீர் வழங்கப்படும் என்று அரசு உறுதியளித்ததாக ஜெகன் கூறினார்.

அரசின் வாக்குறுதியை நம்பி விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரத்துக்கும் மேல் முதலீடு செய்த நிலையில், தற்போது போதிய தண்ணீர் கிடைக்காமல் கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக அவர் வேதனை தெரிவித்தார்.

ராயலசீமா மட்டுமின்றி கடலோரப் பகுதிகளிலும் விவசாயிகள் அச்சத்துடன் உள்ளனர். ஆனால், விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஜெகன் விமர்சித்தார்.

ஸ்ரீசைலம் தண்ணீர்

ஸ்ரீசைலம் அணையில் உள்ள தண்ணீரை வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்குவதற்கு பதிலாக, தெலங்கானாவுடன் போட்டிபோட்டு மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று ஜெகன் கூறினார்.

போதிய தண்ணீர் இருந்தும் போதிரெட்டிப்பாடு கால்வாய் மூலம் ராயலசீமாவுக்கு தண்ணீர் திறக்க அரசு முன்வரவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

செப்டம்பர் 15-ந் தேதிக்கு பிறகு மழைப்பொழிவு குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், ராயலசீமா விவசாயிகளுக்கு வரும் நாட்களில் தண்ணீர் எவ்வாறு வழங்கப்படும் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

டிஎஸ்சி முறைகேடு

இதற்கிடையே, டிஎஸ்சி ஆசிரியர் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, அது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று தங்கள் கட்சி விடுத்த சவாலுக்கு சந்திரபாபு அரசு இதுவரை பதில் அளிக்கவில்லை என்றும் ஜெகன் தெரிவித்தார்.

வறட்சியால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தேவையான தண்ணீரை உடனடியாக வழங்குவதுடன், ராயலசீமா நீர்ப்பாசன திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இவ்வாறு ஜெகன் கூறினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA