பாவூர்சத்திரத்தில் பயணிகள் ஆட்டோ கவிழ்ந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு
தென்காசி, 26 ஆகஸ்ட் (ஹி.ச.) தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேலமாதாபுரம் வேளார் தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளி வேலுசாமியின் 3 வயது மகன் ஹரிஷ். சிறுவனுக்கு மருத்துவப் பரிசோதனை செய்வதற்காக அவரது தாய் தேவகிருபா மற்றும் பாட்டி காளியம்மாள் ஆகியோர் பயணிக
பலி


தென்காசி, 26 ஆகஸ்ட் (ஹி.ச.)

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேலமாதாபுரம் வேளார் தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளி வேலுசாமியின் 3 வயது மகன் ஹரிஷ். சிறுவனுக்கு மருத்துவப் பரிசோதனை செய்வதற்காக அவரது தாய் தேவகிருபா மற்றும் பாட்டி காளியம்மாள் ஆகியோர் பயணிகள் ஆட்டோவில் பாவூர்சத்திரம்–சுரண்டை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது கீழப்பாவூர் பகுதியில் இருந்து கட்டுமானப் பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த லோடு ஆட்டோ, பயணிகள் ஆட்டோ மீது உரசியதாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறிய பயணிகள் ஆட்டோ சாலையில் குப்புறக் கவிழ்ந்தது. விபத்தில் சிறுவன் ஹரிஷ், அவரது தாய் தேவகிருபா மற்றும் பாட்டி காளியம்மாள் ஆகியோர் காயமடைந்தனர்.

மூவரும் மீட்கப்பட்டு பாவூர்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிறுவன் ஹரிஷ் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காயமடைந்த தேவகிருபா மற்றும் காளியம்மாள் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் லோடு ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, லோடு ஆட்டோ பயணிகள் ஆட்டோ மீது உரசுவதும், ஆட்டோ குப்புறக் கவிழ்வதும் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

Hindusthan Samachar / GOKILA arumugam