Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 ஆகஸ்ட் (ஹி.ச.)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலம் தழுவிய மக்கள் சந்திப்பு இயக்கம் ஆகஸ்ட் 26 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அதன் ஒரு பகுதியாக சென்னை அமைந்தகரை மார்க்கெட் பகுதியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் துவக்கி வைத்தார் .
அப்போது பேசிய அவர்,
இன்று முதல் 31-ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை நேரடியாக சந்தித்து மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றியும், அதற்கு வைத்துள்ள மாற்று வழிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவிக்க உள்ளது.
வெறுப்பு அரசியல் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிராக சிலர் செயல்பட்டு வருகின்றனர்.
காதலர்களுக்கு எதிராக கொடூர தாக்குதல் மேற்கொள்ளும் அமைப்புக்களுக்கு ஆர்எஸ்எஸ் தலைமை தாங்குகிறது.
இஸ்லாமியர்களின் குடியிருப்புகள், தேவாலயங்களை இடிப்பது என அடுக்கடுக்கான குற்றங்களை ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தொடர்ச்சியாக செயல்படுத்தி வருகிறார்கள். அரசியல் சாசனத்திற்கு எதிராக இந்த அமைப்புக்கள் தொடர்ந்து செயல்படுகிறார்கள்.
இந்திய அரசியல் சாசனம், விரும்பிய மதத்தை பின்பற்ற வாய்ப்பளிக்கிறது. இந்தியாவின் பண்பாடுகளுக்கு விரோதமான கொள்கைகளை பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கள் பின்பற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளன.
நாட்டில் விலைவாசி உயர்வு விண்ணை தாண்டி செல்கிறது. வரலாற்றில் இல்லாத வகையில் ஒரு கிலோ சர்க்கரை ரூ.72 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்ந்துள்ளது.
ஆனால் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் இது தொடர்பாக எந்த நவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்றார்.
தமிழக பட்ஜெட் தொடர்பாக பேசிய அவர்,
தமிழக பட்ஜெட்டில் அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப எந்த அறிவிப்பும் இல்லை. தமிழ்நாடு இளைஞர்கள் பெரும்பாலும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களித்தார்கள்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் 3 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. பொதுத்துறையை தனியாருக்கு தாரை வார்ப்பத்தால் இடஒதுக்கீடு மூலம் பயன்பெறும் இளைஞர்கள் பாதிப்படைகிறார்கள்.
வேலையின்மை பூதாகரமான பிரச்சனையாக மாறுகிறது. கட்டுமான தொழிலாளியை விட பொறியியல் படித்தவர்களுக்கு ஊதியம் குறைவு என்றும் வேதனை தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் பற்றி பேசிய அவர்,
தமிழ்நாடு சட்டப்பேரவையில் லாவணி கச்சேரி நடக்கிறது. மானியக் கோரிக்கை மீது ஆக்கப்பூர்வமாக பேசாமல் கடந்த ஆட்சியில் நடந்தது பற்றி பேசுகிறார்கள்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பு சரியாக வழங்கப்படவில்லை. மக்கள் பிரச்சினைகளை பேசாமல் நேரத்தை வீணடிப்பதை நாங்கள் ஏற்கவில்லை.
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் ஒரு வாரத்திற்கு மேல் நடக்கிறது. ஏற்கனவே திமுக ஆட்சியில் போராட்டம் நடத்தி தற்காலிக தீர்வு ஏற்படுத்தப்பட்டது.
பணி நிரந்தரம் கோரிக்கையை வைத்து போராடுகிறார்கள். அவர்கள் கோரிக்கையை பேசி தீர்க்க வேண்டும்.
அதைவிடுத்து போராட்டத்தை தடுப்பது, கைது செய்வது போன்ற நடவடிக்கையில் அரசு ஈடுபடுவது முறையல்ல. தமிழ்நாடு முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் நிரந்தரப்படுத்தப்பட வேண்டும் என்றார்.
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து தொடர்பாக பேசிய அவர், இரண்டாம் விமான நிலையம் வேண்டாம் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்து கிடையாது. இரண்டாவது விமான நிலையம் வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் பரந்தூர் என்பது அதற்கு பொருத்தமில்லாத இடம்.
அதனால் தான் திமுக ஆட்சியில் மச்சேந்திரன் குழு அமைக்கப்பட்டது. இந்த அறிக்கை என்ன ஆனது என்று தெரியவில்லை.
அப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக சந்தித்து அந்த அறிக்கையை வெளியிட சொன்னோம்.
ஆனால் கடந்த திமுக ஆட்சி அதனை வெளியிடவில்லை. மச்சேந்திரன் குழு அளித்த அறிக்கையை வெளியிடாமல் மூடி மறைத்தது ஏன்?
என்றும் கேள்வி எழுப்பினார்.
Hindusthan Samachar / ANANDHAN