Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 ஆகஸ்ட் (ஹி.ச.)
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் அருள்பாலிக்கும் புனிதமான ஆனந்த சரஸ் எனப்படும் அனந்தசரஸ் குளத்தை, ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு திறக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தத்தா தேசிய வம்சத்தார் சபை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அத்திவரதர் எழுந்தருளியிருக்கும் அனந்தசரஸ் குளம், பாரம்பரியமிக்க புனித தீர்த்தமாகும் என்றும், ஆவணி அவிட்டம் போன்ற வேதம் சார்ந்த முக்கிய நிகழ்வுகளின்போது அந்தக் குளத்தில் புனித நீராடி வேத பாராயணம் செய்வது தொன்றுதொட்டு இருந்து வரும் மரபு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே வருகின்ற ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு ஆனந்த சரஸ் குளத்தை திறந்து, தங்களையும், வேதபராயணக்காரர்கள் மற்றும் கோயில் ஸ்தலத்தாரையும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், முக்கிய நாட்களில் குளத்தை திறக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதை பொருட்படுத்தாமல், குளத்தை மூடிவிட்டதாகவும், அடிப்படை மத உரிமைகள் தடுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின் அடிப்படையில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
கோயில் நிர்வாகம் தரப்பில், புனித நீராடுவதற்காக ஏராளமான மக்கள் கூட வாய்ப்புள்ளதால், அனந்தசரஸ் குளத்தை திறக்க இயலாது என வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, புனித நாட்களில் ஆனந்த சரஸ் குளத்தை திறக்கலம் என கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின சுட்டிக்காட்டி, குளத்தை திறக்கக்கோரி மனுதாரர் சபை அளித்த கோரிக்கை மனுக்களைப் பரிசீலித்து, தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டுமென வரதராஜ பெருமாள் கோயில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b