தனியார் நிலங்களில் உள்ள அரிய வகை ரோஸ்வுட் மரங்களை வெட்ட இடைக்கால தடை
சென்னை, 26 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழகத்தில் அரிய வகை மரமான ரோஸ்வுட் (Dalbergia latifolia) மரங்களை பாதுகாக்கும் வகையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட தமிழ்நாடு ரோஸ்வுட் மரங்கள் (பாதுகாப்பு) சட்டம் 1994 மற்றும் தமிழ
Madras High Court


சென்னை, 26 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழகத்தில் அரிய வகை மரமான ரோஸ்வுட்

(Dalbergia latifolia) மரங்களை பாதுகாக்கும் வகையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட தமிழ்நாடு ரோஸ்வுட் மரங்கள் (பாதுகாப்பு) சட்டம் 1994 மற்றும் தமிழ்நாடு ரோஸ்வுட் மரங்கள் (பாதுகாப்பு) விதிகள் 1995 ஆகியவற்றை ரத்து செய்வதற்கான முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அளித்த பரிந்துரையை ஏற்று மரங்களை வெட்ட தமிழ்நாடு அரசு 2025 ஜூன் 9-ம் தேதி அரசாணை வெளியிட்டது.

தமிழ்நாடு அரசின் இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி மருத்துவர் முருகவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ராஜசேகர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், தமிழக அரசின் இந்த அரசாணை பல்வேறு பட்டா நிலங்களில் உள்ள ரோஸ்வுட் மரங்களை கட்டுப்பாடின்றி அகற்றுவதற்கு வழி வகுக்கிறது. இந்த அரசணை என்பது சுயநல நோக்கத்துடன் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அரசாணையால், 1994 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு ரோஸ்வுட் மரங்கள் (பாதுகாப்பு) சட்டத்தை நீர்த்து போக செய்துவிடும். தமிழ்நாட்டில் இயல்பாகக் காணப்படும் முக்கியமான மர இனமான அரிய வகை ரோஸ்வுட் மரத்தை இயற்கையான முறையில் மட்டுமே வளர்க்க முடியும். அதை அளித்துவிட்டால் மீண்டும் உருவாக்குவது சாத்தியமற்றது.

இந்த அரியவகை மரங்களை பாதுகாக்கும் பொருட்டு, 1994ஆம் ஆண்டு தமிழ்நாடு ரோஸ்வுட் மரங்கள் (பாதுகாப்பு) சட்டம் இயற்றப்பட்டது. அதனால், தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் முகமது ஃபயாஸ் அலி, பல்வேறு காரணங்களை அடிப்படையாக கொண்டு முதன்மை வன பாதுகாவலரின் பரிந்துரை ஏற்கபட்டது. தமிழ்நாடு ரோஸ்வுட் மரங்கள் பாதுகாப்பு சட்டம் 1994 அமலுக்கு வருவதற்கு முன்பு மற்றும் அதன் பின்னரும் என்ன மாறுதல்கள் ஏற்பட்டது என்பதை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்.

தனியார் நிலங்களில் ரோஸ்வுட் மரங்கள் வளர்ப்பதை ஊக்குவிப்பதன் மூலம் பசுமை காடுகளை அதிகரிக்கவும், ரோஸ்வுட் மரங்களின் லாபகரமான விலையைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் தங்கள் பட்டா நிலங்களில் அதிக எண்ணிக்கையில் ரோஸ்வுட் மரங்களை நடவு செய்ய ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

மரங்களை வெட்ட கடுமையான சட்டங்கள் இருப்பதால், மேற்கொண்டு மரங்களை யாரும் வளர்க்க முன் வர மாட்டார்கள். மரங்களை வெட்ட அனுமதி வழங்கினால் அதை வளர்க்க அதிகமானோர் முன்வருவார்கள்.

சட்டம் கடுமையாக இருப்பதால் அரிய வகை ரோஸ்வுட் மரங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு பதிலாக குறைந்து முற்றிலுமாக அழிந்துவிடும் என்பதால், மரங்களை வெட்ட அனுமதி வழங்கும் வகையில் பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டது. இது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழ்நாடு ரோஸ்வுட் மரங்கள் பாதுகாப்பு சட்டம் 1994-ஐ ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்ட காரணங்கள் முற்றிலும் முரணாக உள்ளது. தென்னிந்தியாவில் மட்டுமே வளரும் அரிய வகை ரோஸ்வுட் மரங்களை இயற்கையான வளர்ச்சியைத் தவிர வேறு வழியில் மீண்டும் வளர்ப்பது முற்றிலும் சாத்தியமற்றது.

எனவே, முதன்மை தலைமை வனப் பாதுகாவலரின் பரிந்துரையை ஏற்று 2025 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை தனியார் நிலங்களில் உள்ள ரோஸ்வுட் மரங்களை வெட்டுவதற்கு அதிகாரிகள் அனுமதியும் வழங்கக் கூடாது என உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN