கல்லூரிகளுக்கும் அரசாணையை அமல்படுத்த முடியுமா? - உயர்நீதிமன்றம் கேள்வி
மதுரை, 26 ஆகஸ்ட் (ஹி.ச.) விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்ரமன், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் சேர்க்கையின்போது சாதி, சமூக விவரங்களை கட்டாயமாக பெறத் தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். தனியார் கல்வி நிறுவனங
உயர்நீதிமன்ற மதுரை கிளை


மதுரை, 26 ஆகஸ்ட் (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்ரமன், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் சேர்க்கையின்போது சாதி, சமூக விவரங்களை கட்டாயமாக பெறத் தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களில் சாதி மற்றும் சமூக விவரங்களை கட்டாயமாக கேட்பதால் பாகுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனைத் தடுக்க உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், பள்ளி மாணவர் சேர்க்கையின்போதும் சாதி, சமய விவரங்களை தெரிவிக்க விருப்பம் இல்லாதவர்கள் அவற்றை குறிப்பிடாமல் விடுவதற்கு ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இடைநிலைப் பள்ளி சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழிலும் சாதி, சமய விவரங்களை குறிப்பிடாமல் விடுவதற்கு உரிமை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இதற்கு மனுதாரர் தரப்பில், இந்த அரசாணை கடந்த 2000ஆம் ஆண்டே பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும், அது பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்துகிறது என்பதால் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளிலும் சாதி விவரங்களை கட்டாயமாக சேகரிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

அப்போது நீதிபதிகள், “சாதி அடையாளங்களை குறிப்பிடாமல் விண்ணப்பங்களை காலியாக விடுவதற்கு அனுமதிக்க முடியாதா?” என கேள்வி எழுப்பினர்.

மேலும், பள்ளிகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை கல்லூரிகளுக்கும் அமல்படுத்த முடியுமா என்பது குறித்து அரசு தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam