Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 ஆகஸ்ட் (ஹி.ச)
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனூர் மலைப்பகுதியில் கரும்பு லாரிகளை எதிர்பார்த்து யானைகள் சாலையோரங்களில் காத்திருப்பது வழக்கமாக உள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் கரும்பு லாரிகளை வழிமறித்து, அதிலிருந்து கரும்புக் கட்டுகளை யானைகள் இழுத்துச் சென்று உண்பது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில், ஆசனூர் அருகே காராப்பள்ளம் பகுதியில் கரும்பு லாரிகளை எதிர்பார்த்து சில யானைகள் ஆசனூர்–மைசூர் சாலையோரம் காத்திருந்தன. இதில், கரும்பு கிடைக்காததால் ஆத்திரமடைந்ததாகக் கூறப்படும் ஒற்றை யானை நீண்ட நேரமாக சாலையோரத்தில் நின்றிருந்தது.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற வாகன ஓட்டிகளை நோக்கி யானை திடீரென மின்னல் வேகத்தில் ஓடி வந்து தாக்க முயன்றது. இதனால் அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் சுதாரித்துக்கொண்டு, வேகமாக இருசக்கர வாகனத்தை இயக்கி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
யானை தங்களை நோக்கி ஆவேசமாக ஓடி வந்த காட்சியை சில இளைஞர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த பதற்றமான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகின்றன. யானையின் திடீர் தாக்குதல் முயற்சியைக் கண்டு பின்னால் வந்த வாகன ஓட்டிகளும் அச்சத்தில் உறைந்தனர்.
இதையடுத்து, ஆசனூர் வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். சாலையோரங்களில் யானைகள் நிற்கும்போது, இருசக்கர வாகனங்களில் தனியாகச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், முடிந்தவரை கனரக வாகனங்களுடன் இணைந்து பாதுகாப்பாகவும், மிகுந்த எச்சரிக்கையுடனும் பயணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ