இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் -டி.டி.வி தினகரன் கண்டனம்
சென்னை, 26 ஆகஸ்ட் (ஹி.ச.) பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கான உற்பத்தி அனுமதியை வழங்குவதில் தமிழக அரசு தாமதம் செய்வதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொட
டிடிவி


சென்னை, 26 ஆகஸ்ட் (ஹி.ச.)

பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கான உற்பத்தி அனுமதியை வழங்குவதில் தமிழக அரசு தாமதம் செய்வதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்திலேயே வேட்டி, சேலை உற்பத்திக்கான அனுமதி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் நிலையில், நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் தருவாயிலும் அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

இதனால், இத்தொழிலை மட்டுமே நம்பியுள்ள சுமார் 3 லட்சம் நெசவாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கூடுதல் தரம் கொண்ட புதிய ரக நூலில் வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்காக கடந்த ஜூலை மாதமே முதற்கட்டமாக ரூ.300 கோடி நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், உற்பத்தியைத் தொடங்க நெசவாளர்களுக்கு அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்துவது கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.

உற்பத்தி, நெசவு, தரப் பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை குறுகிய காலத்தில் மேற்கொள்ள வேண்டியுள்ளதால், உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதா அல்லது தாய்மாமன் தங்க மோதிரம் உள்ளிட்ட திட்டங்களைப் போல இத்திட்டத்தையும் வெளிமாநில நிறுவனங்களுக்கு வழங்க தவெக அரசு முடிவு செய்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

எனவே, பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே விலையில்லா வேட்டி, சேலைகள் பயனாளிகளைச் சென்றடையும் வகையில் உற்பத்திக்கான அனுமதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், சுமார் 3 லட்சம் நெசவாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P