Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 26 ஆகஸ்ட் (ஹி.ச.)
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹானூர் வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில் கூறியதாவது;
கடந்த 15ஆம் தேதி அதிகாலை அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், குமார் ஆகிய 3 தமிழர்கள் மான் வேட்டையில் ஈடுபட்டதாகக் கூறி கர்நாடக வனத்துறையினர் சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினருடன் ஏற்பட்ட மோதலின்போது பாதுகாப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் கர்நாடக அரசு தரப்பில் கூறப்பட்டது.
ஆனால், கொல்லப்பட்டவர்களின் உடற்கூறாய்வு அறிக்கையில் குமார் மற்றும் அந்தோணிசாமியின் உடலில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த காயங்கள் மிகவும் நெருக்கமான தூரத்தில் இருந்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருப்பதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதன்மூலம், 3 தமிழர்களும் திட்டமிட்டு சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என்ற பாமகவின் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கர்நாடக அரசு உண்மையை மூடி மறைக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய அன்புமணி, இந்த விவகாரத்தில் நடுநிலையான விசாரணை நடைபெற சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கொல்லப்பட்ட 3 தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசு இந்த விவகாரத்தில் இனியும் மவுனமாக இருக்காமல் கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்து சிபிஐ விசாரணையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam