Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு , 26 ஆகஸ்ட் (ஹி.ச.)
காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையே தொடர்ந்து பிரச்சினை நிலவி வருகிறது.
தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்படுவதற்கு கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் மீண்டும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
காவிரி நீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் நேற்று முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. கன்னட சலுவாலி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து, செப்டம்பர் 1-ந்தேதி தமிழக-கர்நாடக எல்லையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.
அத்திப்பள்ளியில்
இதுகுறித்து அவர் கூறுகையில்,
தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பதை கண்டித்து செப்டம்பர் 1-ந்தேதி கர்நாடக-தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
இந்த போராட்டத்தின்போது கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கும், தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தின் உரிமையை பாதுகாக்க தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் வாட்டாள் நாகராஜ் கூறினார்.
வாட்டாள் நாகராஜின் இந்த அறிவிப்பு காரணமாக தமிழக-கர்நாடக எல்லையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அத்திப்பள்ளி வழியாக இரு மாநிலங்களுக்கும் இடையே தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வரும் நிலையில், செப்டம்பர் 1-ந்தேதி நடைபெற உள்ள முற்றுகை போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இதையடுத்து எல்லைப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA