Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 26 ஆகஸ்ட் (ஹி.ச.)
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களையும் மீட்டு, அவர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் இன்று காலை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த 57 பேர் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கித் தவிப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தில் சிக்கியுள்ள 57 பேரும் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், சுற்றுலாவுக்காக நேபாளம் சென்றவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர்களில் 22 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களின் நிலை குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே, நேபாள அரசுடன் தொடர்பு கொண்டு, வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களையும் பத்திரமாக மீட்டு, அவர்களின் சொந்த ஊர்களுக்கு அழைத்து வர மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மீட்புப் பணிகள் மற்றும் பிற மனிதநேய உதவிகளுக்கு நேபாள அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P