பண்ருட்டி அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தலை விரித்தாடும் லஞ்சம்
கடலூர், 26 ஆகஸ்ட் (ஹி.ச.) கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பி.என்.பாளையத்தில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இந்த கொள்முதல் நிலையத்தி
கொள்முதல் நிலையம்


கடலூர், 26 ஆகஸ்ட் (ஹி.ச.)

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பி.என்.பாளையத்தில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

இந்த கொள்முதல் நிலையத்திற்கு 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அறுவடை செய்த நெல்மணிகளை கொண்டு வந்துள்ளனர். ஆனால், 15 நாட்களுக்கும் மேலாக நெல்மணிகள் எடை போடப்பட்டு கொள்முதல் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, கடந்த சில நாட்களாக அப்பகுதியில் மழை பெய்து வருவதால், கொள்முதல் நிலையத்தில் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் மழையில் நனைந்து முளைத்து சேதமடைந்துள்ளன. மேலும், நெல்மணிகள் வைக்கப்பட்டுள்ள பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக காணப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நெல் எடை போடுவதற்கு ஒரு மூட்டைக்கு ரூ.50-ம், வாட்ச்மேனுக்கு ரூ.500-ம் லஞ்சமாக வழங்க வேண்டும் என ஊழியர்கள் நிபந்தனை விதிப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். லஞ்சம் வழங்க மறுக்கும் விவசாயிகளின் நெல் எடை போடப்படாமல் காலதாமதம் செய்யப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, விவசாயிகளின் நெல்மணிகளை பாதுகாக்க சிமெண்ட் களம் அமைக்க வேண்டும், போதுமான தார்ப்பாய்கள் வழங்க வேண்டும் என்றும், கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வரப்படும் நெல்மணிகளை அதிகபட்சம் 3 நாட்களுக்குள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam