Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 ஆகஸ்ட் (ஹி.ச.)
கடந்த சில மாதங்களாக எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.842 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்ததால், தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய விரைவு ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டன.
ஆக.20 முதல் ஆக.24 வரை எழும்பூருக்கு வந்த தஞ்சாவூர் விரைவு ரயில் (எண்: 16866), மங்களூரு விரைவு ரயில் (எண்: 16160), கொல்லம் அனந்தபுரி அதிவிரைவு ரயில் (எண்: 20636) ஆகிய ரயில்கள் தாம்பரத்துடனும், திருச்சியில் இருந்து வரும் ராக்போர்ட் விரைவு ரயில் (எண்:12654) மாம்பலத்துடனும் நிறுத்தப்பட்டன.
இப்பராமரிப்பு பணி காரணமாக மெட்ரோவிலிருந்து வெளியே வரும் பயணிகளில் வழியும் மாற்றம் செய்யப்பட்டு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் 2-ஆம் கட்டமாக, புதிய நடைமேடை அமைக்கும் பணிகள் கடந்த ஜூலை முதல் நடைபெறுகின்றன.
மேலும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் விரைவு ரயில்கள் அனைத்தும் தாம்பரம் மற்றும் மாம்பலம் ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டு, அங்கேயே பயணத்தை நிறைவு செய்து வந்தன. இதனால் எழும்பூர் வழியாக பயணிக்கும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
தற்போது மேம்பாட்டு பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளதால், பயணிகளின் வசதிக்காக இன்று முதல் அனைத்து விரைவு ரயில்களும் மீண்டும் எழும்பூரில் இருந்து வழக்கமான நேரத்தில் புறப்பட்டு செல்லும் மற்றும் வந்தடையும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதனால் தென் மாவட்ட பயணிகள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b