Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 26 ஆகஸ்ட் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் பழனி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த 17 தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, அவர்களை மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்தி மருத்துவமனை முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
பழனி அரசு மருத்துவமனையில் தூய்மை பணிகள் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பல ஆண்டுகளாக மருத்துவமனையில் தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வந்த 17 தொழிலாளர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, கொரோனா தொற்று காலத்திலும் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து பணியாற்றி நோயாளிகள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக தூய்மை பணிகளை மேற்கொண்ட தொழிலாளர்களுக்கு தற்போது மீண்டும் பணி வழங்கப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இதனை கண்டித்தும், பணி நீக்கம் செய்யப்பட்ட 17 தொழிலாளர்களுக்கும் மீண்டும் வேலை வழங்கக் கோரியும், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் தலைமையில் தூய்மை பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மருத்துவமனை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில், பல ஆண்டுகளாக பணியாற்றிய தொழிலாளர்களை புறக்கணித்து புதிய தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், தொழிலாளர் சட்டங்களுக்கு விரோதமாக செயல்படும் தனியார் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், அரசு மருத்துவமனையில் தேவையான எண்ணிக்கையை விட குறைவான தூய்மை பணியாளர்களை பணியில் நியமித்துவிட்டு, அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள் பணியில் இருப்பதாக கணக்கு காட்டி அரசிடம் இருந்து ஒப்பந்தத் தொகையை பெறுவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த விவகாரம் குறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரடியாக விசாரணை நடத்தி, முறைகேடு இருந்தால் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அரசு மருத்துவமனையின் தூய்மை பணிகள் நோயாளிகளின் சுகாதாரம் மற்றும் மருத்துவமனை சுற்றுப்புற தூய்மைக்கு மிகவும் முக்கியமானவை என்பதால், அனுபவம் வாய்ந்த தொழிலாளர்களை பணியில் இருந்து நீக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
பணி நீக்கம் செய்யப்பட்ட 17 தொழிலாளர்களுக்கும் மீண்டும் பணி வழங்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும், தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இதனால் பழனி அரசு மருத்துவமனை முன்பு பரபரப்பான சூழல் நிலவியது. தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
Hindusthan Samachar / ANANDHAN