Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 26 ஆகஸ்ட் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரம் மங்கம்மாள் கோயில் தெருவைச் சேர்ந்த கணேச பாண்டி (49), அவரது மகன் கௌதம் (20) ஆகியோர் நேற்று நள்ளிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த மற்றொரு பிரிவைச் சேர்ந்த கும்பல், இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த தந்தை, மகன் இருவரும் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த கணேச பாண்டி தரப்பினர், எதிர்தரப்பினர் வசிக்கும் பகுதிக்குச் சென்று அங்கிருந்த 15-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 ஆட்டோக்களை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதால், அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நடைபெற்ற திருமண ஊர்வலத்தின்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், பின்னர் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் பிரச்சனை தீர்க்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அந்த முன்விரோதம் காரணமாகவே தற்போதைய தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam