மாணவர் மரண வழக்கு - ஐஐடி டெல்லி விசாரணைக் குழு தலைவர் பதவியில் இருந்து முன்னாள் டிஜிபி அசோக் குமார் விலகல்
புதுடெல்லி, 26 ஆகஸ்ட் (ஹி.ச.) கடந்த ஆகஸ்ட் 22 அன்று 31 வயதான ரிஷிகேஷ் குமார், ஐஐடி டெல்லியின் விரிவுரை அரங்க வளாகத்தின் ஆறாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். தற்கொலைக் கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என்றும், அவரது மரணத்திற்கான சூழ
மாணவர் மரண வழக்கு - ஐஐடி டெல்லி விசாரணைக் குழு தலைவர் பதவியில் இருந்து முன்னாள் டிஜிபி அசோக் குமார் விலகல்


புதுடெல்லி, 26 ஆகஸ்ட் (ஹி.ச.)

கடந்த ஆகஸ்ட் 22 அன்று 31 வயதான ரிஷிகேஷ் குமார், ஐஐடி டெல்லியின் விரிவுரை அரங்க வளாகத்தின் ஆறாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.

தற்கொலைக் கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என்றும், அவரது மரணத்திற்கான சூழ்நிலைகள் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

குமாரின் மரணம் வளாகத்தில் போராட்டங்களைத் தூண்டியது. மாணவர்களுக்கான ஆதரவு அமைப்புகளின் போதாமை குறித்து கவலைகளை எழுப்பிய மாணவர்கள், சுயாதீன விசாரணைக்கு அழைப்பு விடுத்தனர்.

இந்தச் சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் தெரிவித்துள்ள ஐஐடி டெல்லி, மாணவர்களின் நலனும் மனநலமும் நிறுவனத்தின் முழுமையான முன்னுரிமை என்று உறுதிபடுத்தியுள்ளது.குமாரின் குடும்பத்திற்கு ஐஐடி டெல்லி நிதி உதவி வழங்கியுள்ளது.

இந்த நிலையில் ரிஷிகேஷ் குமார் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் பதவியில் இருந்து உத்தராகண்ட் மாநில முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் அசோக் குமார் விலகியுள்ளதாக இன்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐந்து பேர் கொண்ட வெளிப்புற விசாரணைக் குழுவுக்கு புதிய தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார் என ஐஐடி டெல்லி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குமாரின் மரணத்திற்கான சூழ்நிலைகள் குறித்து விசாரணை நடத்தக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 24 அன்று ஐஐடி டெல்லி நிர்வாகத்தால் இந்தக் குழு அமைக்கப்பட்டது.

தொடர்புடைய நிர்வாக அலுவலகங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்வது, தற்போதுள்ள நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளை மதிப்பாய்வு செய்வது, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்தாலோசிப்பது மற்றும் பரிந்துரைகளை வழங்குவது ஆகியவை இந்தக் குழுவின் பணியாகும்.

ஹரியானா விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் உள்ள அசோக் குமார், ஆரம்பத்தில் இந்தக் குழுவிற்கு தலைமை தாங்கினார்.

இந்தக் குழுவில் புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மனநல மருத்துவத் துறைத் தலைவர் பேராசிரியர் பிரதாப் சர்மா, இரண்டு மாணவர் பிரதிநிதிகள் மற்றும் செயலாளராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படும் ஐஐடி டெல்லி பதிவாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குழுவிடம் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b