தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக்காய்ச்சல் - பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை
சென்னை, 26 ஆகஸ்ட் (ஹி.ச.) டெல்லியை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் H1N1 பன்றிக்காய்ச்சலின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. ஜனவரி மாதத்தில் வெறும் 19 ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 339 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த தி
Swine flu on the rise in Tamil Nadu


சென்னை, 26 ஆகஸ்ட் (ஹி.ச.)

டெல்லியை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் H1N1 பன்றிக்காய்ச்சலின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.

ஜனவரி மாதத்தில் வெறும் 19 ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 339 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த திடீர் அதிகரிப்பு பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

பன்றிக்காய்ச்சலின் முதன்மை அறிகுறிகளாக கடுமையான தலைவலி, தொடர் உடல் சோர்வு, பசியின்மை ஆகியவை காணப்படுகின்றன. இதுதவிர சிலருக்கு மூட்டு வலி, தசை வலி, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த அறிகுறிகள் தென்பட்டால் அதனை சாதாரண காய்ச்சல் என்று எண்ணி அலட்சியப்படுத்தக் கூடாது என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

அறிகுறிகள் தென்பட்ட உடனேயே தாமாக மருந்தகங்களுக்கு சென்று மருந்துகளை வாங்கி உட்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும், உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது தனியார் மருத்துவமனையை அணுகி மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுதல், முகக்கவசம் அணிதல், கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களை தவிர்த்தல் மற்றும் சத்தான உணவுகளை உட்கொள்வதன் மூலம் இந்த தொற்று பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b