ஆசிரியர் தகுதித்தேர்வு விலக்கு தீர்மானம் கண்துடைப்பு நாடகமாக இருக்கக்கூடாது - அன்பில் மகேஸ்
சென்னை, 26 ஆகஸ்ட் (ஹி.ச.) ஆசிரியர் தகுதித்தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ள தீர்மானம் கண்துடைப்பு நாடகமாக மட்டும் இருக்கக்கூடாது என திமுக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்
அன்பில் மகேஷ்


சென்னை, 26 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஆசிரியர் தகுதித்தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ள தீர்மானம் கண்துடைப்பு நாடகமாக மட்டும் இருக்கக்கூடாது என திமுக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பாக தமிழக அரசின் நடவடிக்கைகள் ஆசிரியர் சங்கங்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாக கூறியுள்ளார்.

தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முந்தைய நாள் சென்னை உயர்நீதிமன்றத்தில், ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்களை குறைக்க முடியாது என்றும், அவ்வாறு குறைத்தால் தேர்வின் மதிப்பு குறைந்துவிடும் என்றும் தமிழக அரசு வாதிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மறுநாளே சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது இரட்டை நிலைப்பாடாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

2025-ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, ஆசிரியர்களை பாதுகாக்க திமுக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்ததுடன், ஆசிரியர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி, பிரதமருக்கு கடிதம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அன்பில் மகேஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று சிறப்பு தகுதித்தேர்வு நடத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும், தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வு வழங்கப்பட்டதாகவும், பின்னர் பல்வேறு பிரிவினருக்கான குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களும் குறைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2026 மே 29-ம் தேதி உச்சநீதிமன்றம் தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மறுத்த பின்னர், புதியதாக பொறுப்பேற்ற தவெக அரசு சட்டப்போராட்டத்தை முன்னெடுக்கவில்லை என்றும் அன்பில் மகேஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆசிரியர்களுக்கான பயிற்சி கையேடுகள் வழங்குவதில் தாமதம் செய்ததுடன், உயர்நீதிமன்றத்தில் தேர்ச்சி மதிப்பெண்களை குறைக்க முடியாது என அரசு வாதிட்டிருப்பது ஆசிரியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் வாதிட்ட அரசின் முகம்தான் உண்மையான முகமா அல்லது சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய அரசின் முகம்தான் உண்மையான முகமா என கேள்வி எழுப்பியுள்ள அன்பில் மகேஸ், ஆசிரியர்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P