டி.என்.பி எல் கிரிக்கெட்-2- வது தகுதி சுற்றில் திருச்சி- கோவை இன்று மோதல்
சென்னை , 26 ஆகஸ்ட் (ஹி.ச.) 10-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியின் லீக் சுற்று முடிவில் மதுரை பாந்தர்ஸ், திருச்சி கிராண்ட் சோழ
A


சென்னை , 26 ஆகஸ்ட் (ஹி.ச.)

10-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியின் லீக் சுற்று முடிவில் மதுரை பாந்தர்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ், கோவை கிங்ஸ், நடப்பு சாம்பியன் திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய 4 அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.

இதில் முதல் தகுதி சுற்றில் மதுரை பாந்தர்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதிய ஆட்டம் மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது.

புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்திருந்ததால் மதுரை பாந்தர்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இதையடுத்து நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்றில் திருப்பூர் தமிழன்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதின. அந்த ஆட்டமும் மழையால் கைவிடப்பட்ட நிலையில், புள்ளிப்பட்டியலில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை விட முன்னிலையில் இருந்த கோவை கிங்ஸ் அணி 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது.

இந்த நிலையில், இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் திருச்சி கிராண்ட் சோழாஸ்-கோவை கிங்ஸ் அணிகள் இன்று (புதன்கிழமை) மோதுகின்றன.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி வருகிற 28-ந் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணியை எதிர்கொள்ளும். தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேறும்.

எனவே, இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை கைப்பற்றுவதற்காக திருச்சி மற்றும் கோவை அணிகள் வெற்றியை குறிவைத்து களமிறங்குவதால், இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA