கேசிஆர் ஆட்சியில் மக்கள் நலன்,ரேவந்த் ஆட்சியில் நில வியாபாரம் - பி.ஆர்.எஸ் கட்சி மூத்த தலைவர் ஹரீஷ் ராவ்
ஐதராபாத் , 26 ஆகஸ்ட் (ஹி.ச.) தெலுங்கானாவில் கேசிஆர் ஆட்சியில் மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் நில வியாபாரத்துக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று முன்ன
A


ஐதராபாத் , 26 ஆகஸ்ட் (ஹி.ச.)

தெலுங்கானாவில் கேசிஆர் ஆட்சியில் மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் நில வியாபாரத்துக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று முன்னாள் அமைச்சரும், பாரத ராஷ்டிர சமிதி கட்சி மூத்த தலைவருமான ஹரீஷ் ராவ் குற்றம்சாட்டினார்.

ஐதராபாத் கூகட்பள்ளியில் 22-ஏ தடைப்பட்ட பட்டியலால் பாதிக்கப்பட்டவர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஹரீஷ் ராவ் பேசியதாவது:-

தெலுங்கானாவில் பூங்காக்கள், வீட்டுமனைகள், அரசு நிலங்கள் என எங்கு இடம் கிடைத்தாலும் அவற்றை விற்பனை செய்யும் நடவடிக்கையில் காங்கிரஸ் அரசு ஈடுபட்டு வருகிறது.

இதனால் எதிர்கால சந்ததியினருக்கு குறைந்தபட்சம் பொது பயன்பாட்டுக்கான இடங்கள் கூட இல்லாத நிலை ஏற்படும். அரசின் இதுபோன்ற முடிவுகளால் ஐதராபாத்தின் பிராண்ட் இமேஜ் பாதிக்கப்படுகிறது.

பொதுமக்களின் சொத்துகளை 22-ஏ தடைப்பட்ட பட்டியலில் சேர்க்கும் அரசு, அரசு நிலங்களை மட்டும் ஆளுங்கட்சியினருக்கு சாதகமாக பயன்படுத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.

ஏழைகளுக்கு வழங்கப்பட்ட அசைன்மென்ட் நிலங்களையும் அவர்களிடம் இருந்து பறித்து, தொழிலதிபர்களுக்கு வழங்கும் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.

இதனால் ஹைட்ரா அமைப்பு எப்போது வந்து வீடுகளை இடிக்குமோ, 22-ஏ பிரிவு என்ற பெயரில் எப்போது தங்களது நிலங்களை பறிப்பார்களோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

தெலுங்கானா முழுவதும் சுமார் ஒரு கோடி ஏக்கர் நிலங்களும், ஐதராபாத்தில் மட்டும் லட்சக்கணக்கான சொத்துகளும் 22-ஏ பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஹரீஷ் ராவ் தெரிவித்தார்.

அரசு செய்த தவறுக்காக பொதுமக்களை அரசு அலுவலகங்களுக்கு அலையவிட்டு, நிலங்களை 22-ஏ பட்டியலில் இருந்து நீக்குவதற்கு 30 சதவீதம் வரை கமிஷன் வசூலிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

சட்டசபையில் பிரச்சினை

வருகிற செப்டம்பர் 7-ந்தேதி தொடங்கும் தெலுங்கானா சட்டசபை கூட்டத்தொடரில் 22-ஏ பிரச்சினையை தீவிரமாக எழுப்பி, காங்கிரஸ் அரசிடம் கேள்வி எழுப்புவோம் என்று ஹரீஷ் ராவ் கூறினார்.

22-ஏ பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் புரோக்கர்களுக்கு எந்தவித பணமும் கொடுக்க வேண்டாம். பொதுமக்களின் சொத்துகளை பாதுகாக்கும் பொறுப்பை பாரத ராஷ்டிர சமிதி ஏற்றுக்கொள்ளும் என்று ஹரீஷ் ராவ் உறுதியளித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA