Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 26 ஆகஸ்ட் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது. இந்தக் கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக, உதகை - குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரத்தில் இருந்த ராட்சத மரம் ஒன்று திடீரென முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
இதனால் அந்த வழியாக போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. உதகையிலிருந்து குன்னூர் நோக்கியும், குன்னூரிலிருந்து உதகை நோக்கியும் சென்ற வாகனங்கள் சாலையின் இருபுறமும் செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டன. சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
அதிர்ஷ்டவசமாக மரம் விழுந்த சமயத்தில் அந்த இடத்தில் எந்த வாகனமும் சென்று கொண்டிருக்காததால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் காவல்துறையினர், மரத்தை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மரம் முழுமையாக அகற்றப்பட்ட பின்னரே அவ்வழியே போக்குவரத்து சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b