Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 26 ஆகஸ்ட் (ஹி.ச.)
இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கட்டண அடிப்படையில் ஆபாச உள்ளடக்கங்களை வெளியிட்டதாகக் கூறி, திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்ட 12 பெண்கள் மீது சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் வலசையூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அஜித்சாக்கோ, சேலம் மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், சிலர் சமூக வலைத்தளங்களில் சந்தா கட்டணம் பெற்றுக்கொண்டு ஆபாசமாகப் பேசுவது, உடலைக் காட்டும் வகையிலான வீடியோக்களை வெளியிடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதுபோன்ற செயல்கள் மூலம் மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவதாகவும், 18 வயதுக்குட்பட்ட சிறார்களும் இதுபோன்ற உள்ளடக்கங்களைப் பார்க்கும் வாய்ப்பு இருப்பதால், அவர்களின் மனநிலை பாதிக்கப்படுவதுடன் தவறான பாதைக்கு செல்லும் சூழல் ஏற்படுவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகாரின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணை மேற்கொண்ட சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார், திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்கில் அடுத்தகட்டமாக சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam