Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 26 ஆகஸ்ட்
(ஹி.ச.)
திருவள்ளூர் அருகே உள்ள ஒரு பகுதியில், இறுதிச் சடங்கு நிகழ்ச்சியின் போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்தவர்களிடையே தொடங்கிய இந்த வாக்குவாதம், சிறிது நேரத்தில் பெரும் தகராறாக மாறியுள்ளது. இந்த மோதலின் போது, மணிகண்டன் என்ற இளைஞரை சிலர் கத்தியால் கழுத்தில் வெட்டியதாக கூறப்படுகிறது.
கழுத்தில் பலத்த காயமடைந்த மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனடியாக அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இளைஞரின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, உறவினர்களும், பொதுமக்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக உறுதியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b