வார இறுதி, முகூர்த்தம், பௌர்ணமி - தமிழக அரசு சார்பில் 3,230 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.) வார இறுதி நாட்கள், சுப முகூர்த்த நாட்கள் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்
வார இறுதி, முகூர்த்தம், பௌர்ணமி - தமிழக அரசு சார்பில்  3,230 சிறப்பு பேருந்துகள் இயக்கம்


சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)

வார இறுதி நாட்கள், சுப முகூர்த்த நாட்கள் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக, சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து நாளை மட்டும் 380 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்பதால் பக்தர்கள் காத்திருப்பின்றி பயணிக்க முடியும்.

அதேபோல், சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, வரும் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 28 ஆம் தேதி 1140 சிறப்பு பேருந்துகளும், சனிக்கிழமை ஆகஸ்ட் 29 ஆம் தேதி 1020 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், சேலம், ஈரோடு, தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு இந்த பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும், வார விடுமுறை முடிந்து மீண்டும் சென்னைக்கு திரும்பும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 30 ஆம் தேதி பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு 690 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து கொள்ளுமாறு போக்குவரத்துத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b