Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 27 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆந்திர மாநிலம் கோனசீமா மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் கடலில் காணாமல் போன நிலையில், மேற்கு வங்காள கடற்கரையில் பத்திரமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் அவர்களது குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர்.
மீனவர்களை பாதுகாப்பாக சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி நாரா சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
கோனசீமா மாவட்டம் அல்லவரம் மண்டலம் ஓடலரேவு பகுதியைச் சேர்ந்த 7 மீனவர்கள் கடந்த 3-ந்தேதி படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
நடுக்கடலில் சென்றபோது படகில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் படகு தொடர்ந்து செல்ல முடியாமல் நடுக்கடலில் சிக்கியது.
இதற்கிடையே கடலில் பலத்த காற்று வீசியதால், மீனவர்களின் படகு மேற்கு வங்காளம் நோக்கி அடித்துச் செல்லப்பட்டது.
குறிப்பிட்ட காலத்திற்குள் மீனவர்கள் கரை திரும்பாததால், அவர்களது குடும்பத்தினர் கவலை அடைந்தனர். இதையடுத்து மீனவர்களை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
சந்திரபாபு நாயுடு உத்தரவு
மீனவர்கள் காணாமல் போன தகவல் கிடைத்ததும், முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இந்த விவகாரத்தை முக்கிய பிரச்சினையாக எடுத்துக்கொண்டார். மீனவர்களை விரைந்து கண்டுபிடிக்க தேடுதல் பணிகளை தீவிரப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மூலம் தேடுதல் நடவடிக்கைகளையும் அவர் தொடர்ந்து கண்காணித்தார்.
படகு மேற்கு வங்காளம் நோக்கி அடித்துச் சென்றிருக்கலாம் என கருதிய ஆந்திர அரசு, அங்குள்ள கடலோர காவல்படையினர் மற்றும் சங்கர்பூர் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள உள்ளூர் மீனவர்களை தேடுதல் பணியில் ஈடுபடுத்தியது. மேலும், மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறைகளின் உதவியும் பெறப்பட்டது.
சங்கர்பூர் அருகே கண்டுபிடிப்பு
இந்த தீவிர தேடுதல் நடவடிக்கையின் பலனாக, மேற்கு வங்காளத்தின் சங்கர்பூர் அருகே மீனவர்களின் படகு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்த 7 மீனவர்களும் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்த தகவல் உடனடியாக மீனவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
7 மீனவர்களும் பத்திரமாக இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும், மீனவர்களை பாதுகாப்பாக அவர்களது சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும்படி உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மீனவர்களை தேடும் பணியில் அயராது ஈடுபட்ட அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் தொடர்புடைய குழுவினரையும் சந்திரபாபு நாயுடு பாராட்டினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA