Enter your Email Address to subscribe to our newsletters

மங்களகிரி , 27 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆந்திர மாநிலம் மங்களகிரியை நாட்டிலேயே ஒரு முன்மாதிரி சட்டமன்ற தொகுதியாக உருவாக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, மங்களகிரி நகரில் ரூ.18.55 கோடி மதிப்பீட்டில் நவீன விவசாயிகள் சந்தை அமைக்கப்பட உள்ளது.
இதற்கான கட்டுமானப் பணிகளுக்கு மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித்துறை அமைச்சர் லோகேஷ் அடிக்கல் நாட்டினார்.
மங்களகிரி நகரில் நிடமர்ரு ரெயில்வே கேட் அருகே 5.90 ஏக்கர் பரப்பளவில் இந்த ஒருங்கிணைந்த சந்தை அமைக்கப்படுகிறது.
அரவிந்தோ பார்மா அறக்கட்டளை தனது நிறுவன சமூக பொறுப்பு (சி.எஸ்.ஆர்.) நிதியில் இருந்து இத்திட்டத்துக்கு தேவையான நிதி உதவியை வழங்குகிறது.
மொத்தம் 71,925 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட உள்ள இந்த சந்தையில், காய்கறிகள் விற்பனைக்காக 102 சில்லறை கடைகளும், பழங்கள் மற்றும் பூக்கள் விற்பனைக்காக 54 கடைகளும் அமைக்கப்பட உள்ளன. மேலும், மொத்த விற்பனைக்காக 23 கடைகளும், விளைபொருட்களை இறக்குவதற்காக 18 தளங்களும் ஏற்படுத்தப்பட உள்ளன.
இதுதவிர, விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் வசதிக்காக குளிர்சாதனக் கிடங்கு, காய்கறிகளை சுத்தம் செய்யும் மையங்கள், கேன்டீன் மற்றும் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட நவீன வசதிகளும் இடம்பெற உள்ளன.
இதன்மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்யவும், பொதுமக்கள் தரமான காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களை ஒரே இடத்தில் வாங்கவும் வசதி ஏற்படும்.
அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர் நாரா லோகேஷுக்கு தெலுங்குதேசம் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவர் கல்வெட்டை திறந்து வைத்து, சந்தையின் மாதிரி வடிவமைப்பை பார்வையிட்டு, திட்டத்தின் விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
விழாவில் அரவிந்தோ பார்மா அறக்கட்டளை பிரதிநிதிகள், உள்ளூர் தெலுங்குதேசம் கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA