Enter your Email Address to subscribe to our newsletters

குண்டூர் , 27 ஆகஸ்ட் (ஹி.ச.)
பல்நாடு மாவட்டம் சிலகலூரிபேட்டை அடுத்த அட்டரோடு பகுதியில் நடந்த கோர சாலை விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி ஆழ்ந்த அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
விஜயவாடாவில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற தனியார் டிராவல்ஸ் பஸ், சிலகலூரிபேட்டை அடுத்த அட்டரோடு பகுதியில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தில் உயிரிழந்த அனைவரும் சிலகலூரிபேட்டை மண்டலத்தில் உள்ள வேலூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
ஒரே கிராமத்தை சேர்ந்த பலர் ஒரே விபத்தில் உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் :
ஒரே விபத்தில் 7 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உடனடியாக சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், அவர்களின் உயிரை காப்பாற்ற டாக்டர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், விபத்துக்கான காரணம் குறித்து அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற கோர விபத்துகள் நடைபெறாமல் இருக்க சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தினார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த அவர், உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA